Friday, June 10, 2011

வில்லை வீசிய வேடன் ! - 2

வில்லை வீசிய வேடன் !

 ஒரு நாள்... வேடன் ஒருவன் ஆற்றங்கரைப் பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தான். காலையில் இருந்து அலைந்து திரிந்தும் மான், முயல் என எதுவும் அவன் கண்களில்  அகப்படவில்லை. அந்தச் சமயம் பார்த்து, பக்கத்தில் இருந்த ஆற்றில் இருந்து கொக்கு ஒன்று பெரிய மீன் ஒன்றைக் கவ்விக்கொண்டு பறப்பதைப் பார்த்தான் வேடன்.
'சரி, இன்றைக்கு இதையாவது பிடிப்போம்...’ என்று தனது வில்லில் அம்பை வைத்துக் குறி பார்த்து எய்தான். அந்த அம்பு கொக்கின் உடலில் பாய்ந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட சற்று தூரத்தில் போய் விழுந்தது அந்தக் கொக்கு. வேடன் அதை நோக்கி ஓடினான். அருகே செல்வதற்குள் அந்த கொக்கு தன் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி, மறுபடியும் பறக்கத் தொடங்கியது. இருப்பினும், அதனால் நீண்ட தூரம் பறக்க முடியவில்லை. சற்று தூரத்தில் மீண்டும் கீழே விழுந்தது. வேடன் விடாமல் அங்கே ஓடினான்.
அவனைக் கண்டதும் அந்தக் கொக்கு மீண்டும் பறக்கத் தொடங்கியது.  'அடேங்கப்பா! பலே கொக்குதான். அம்பு பட்ட பிறகும் அசராமல் பறக்கிறதே... அதுவும் வாயில் இருக்கும் மீனைக் கீழே போடாமல்..!’ என்று தனக்குள் ஆச்சரியப்பட்டுக்கொண்டு கொக்கை விடாமல் துரத்தினான் வேடன்.
ஒரு புதரைத் தாண்டிவந்து வேடன் பார்க்க, அந்தக் கொக்கு ஒரு மரத்தின் கீழே விழுந்து கிடந்தது. அவன், அதன் அருகே ஓடிவர... அதற்குள் துடிதுடித்து இறந்துவிட்டது கொக்கு. வேடன் அதைத் தூக்கினான். அதன் வாயில் மீனைக் காணவில்லை. 'எங்கே அந்த மீன்?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தான். மரத்தின் மேலே ஏதோ சத்தம் வர, நிமிர்ந்து பார்த்தான். அங்கே, ஒரு கூட்டில் நான்கு கொக்குக் குஞ்சுகள்... அந்த மீனை மகிழ்ச்சியோடு கொத்தித் தின்றுகொண்டு இருந்தன.
வேடன் திகைத்துப் போனான். 'அடடா! தன் குஞ்சுகளுக்கு உணவைக் கொடுப்பதற் காகத்தான் இந்தத் தாய் கொக்கு இவ்வளவு தூரம் போராடி வந்திருக்கிறது. நாம் வேட்டையாடுவதால் இதுபோல் எத்தனை குஞ்சுகளை அனாதை ஆக்கி இருப்போம்’ என்று நினைத்தவன், ஒரு முடிவுக்கு வந்தான். தனது வில்லையும் அம்பையும் தூக்கி வீசினான். இனி அதைத் தொடுவதில்லை என சபதம் எடுத்தான். 'இந்தக் கொக்குக் குஞ்சுகளை நல்லபடியாக வளர்த்து பறக்க விடவேண்டும்’ எனத் தீர்மானித்த வேடன், குஞ்சுகள் இருந்த அந்தக் கூட்டைக் கையில் ஏந்திக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 வரைகலை: முத்து

No comments:

Post a Comment